“தடுப்பூசி போட்டீர்களா?” - பயணிகளிடம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விழுப்புரத்தில் பஸ்சில் ஏறி பயணிகளிடம் தடுப்பூசி குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2021-12-04 04:31 GMT
விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் இன்று 13-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டதைப் பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று தடுப்பூசி முகாமை ஆய்வு செய்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். தினமும் காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டவரான அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று அதிகாலை 4 மணியளவில் விழுப்புரம் புறநகர் பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டார். 

அப்போது விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்சில் ஏறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதில் இருந்த பயணிகளிடம் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என்பது குறித்து விசாரித்தார். அதில் தடுப்பூசி போடாதவர்களை இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்ய உள்ளார்.  

மேலும் செய்திகள்