இரட்டை தலைமை தொடரும்: அ.தி.மு.க. கட்சி விதிகளில் திருத்தம்

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை தொடரும் வகையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலா நுழைவதை தடுக்கும் வகையில் கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Update: 2021-12-01 23:02 GMT
சென்னை,

பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு. க.வில் ‘ஒற்றை தலைமை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இனி ‘இரட்டை தலைமை’தான் அ.தி.மு.க.வை தொடர்ந்து வழிநடத்தும் என்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா அ.தி.மு.க. எனக்கு பின்னாளும் 100 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து இருக்கும் என்று சூளுரைத்தார். அவர், வகித்த பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு மட்டுமே உரியது என்று அ.தி.மு.க.வின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டோம்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வை வழிநடத்த 12.9.2017 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டு பொதுச்செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொறுப்புகளும், அதிகாரங்களும் வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க. சட்டத்திட்ட விதியை திருத்தம் செய்வதற்கு கட்சி பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி அ.தி.மு.க. சட்டத்திட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில் விதி-20, 40 ஆகியவை திருத்தப்பட்டது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து கட்சியின் செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்னர் அ.தி.மு.க. சட்டத்திட்ட விதிகளில் பின்வரும் திருத்தங்கள் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு

அதன் விவரம் வருமாறு:-

தற்போது அமலில் உள்ள சட்டத்திட்ட விதிமுறைகளின்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். திருத்தங்கள் செய்ய முன்மொழியப்படும் சட்டத்திட்ட விதிமுறைகளின்படி, இனி மேல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள்.

அ.தி.மு.க. வின் சட்டத்திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்தது ஆகும். ஆனால் இந்த சட்டத்திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல.

முழு அதிகாரம்

அ.தி.மு.க. சட்டத்திட்ட விதிகளில் எந்த விதியையும் தளர்த்துவதற்கும், விதிவிலக்கு அளிப்பதற்கும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு. ஆனால் இந்த சட்டத்திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் விலக்கு அளிப்பதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை.

இந்த திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வருகிறது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் என்று இந்த செயற்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது.

மேற்கண்டவாறு சிறப்பு தீர்மானம் நிறைவேறியது.

சசிகலாவுக்கு ‘செக்’

சசிகலா மீண்டும் அ.தி.மு.க. தலைமை பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு யார் வேண்டும் என்றாலும் போட்டியிடலாம். அதிக வாக்குகள் பெறுவோர் ஒருங்கிணைப்பாளராகவும், 2-வது இடத்துக்கு வருவோர் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் பதவியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்