மர்மப்பொருள் வெடித்ததால் சேதமடைந்த பா ஜ க பிரமுகரின் வீடு இடிந்து விழுந்தது போலீஸ் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிர்ப்பு
மர்மப்பொருள் வெடித்ததால் சேதமடைந்த புதுவை பா.ஜ.க. பிரமுகரின் வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. போலீஸ் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
புதுச்சேரி
மர்மப்பொருள் வெடித்ததால் சேதமடைந்த புதுவை பா.ஜ.க. பிரமுகரின் வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. போலீஸ் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மர்மபொருள் வெடித்தது
புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். பா.ஜ.க. பிரமுகரான இவரது வீட்டில் புனரமைப்பு பணிகள் நடந்தநிலையில் அங்கு உறவினர் சீனிவாசன் வசித்து வந்தார். இந்த வீட்டின் முன் பகுதியில் பா.ஜ.க. அலுவலகமும் செயல்பட்டு வந்தது. சுரேஷ் தனது குடும்பத்துடன் எழில் நகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அங்காளம்மன் நகர் வீட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி மர்மப்பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. பா.ஜ.க. அலுவலகமும் இடிந்து நாசமானது. இதில் சீனிவாசனின் மனைவி ஜோதி, மகள் எழிலரசி ஆகியோர் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கியாஸ் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இடிந்து விழுந்தது
2 மாடிகளை கொண்ட அந்த வீட்டின் தரைதள பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்து. இதனால் மாடியில் இருந்த வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தன. இதையடுத்து அந்த பகுதியில் மக்கள் நடமாடாத வகையில் போலீசார் தடுப்புகளை வைத்திருந்தனர்.
இருப்பினும் அருகில் உள்ள வீடுகளில் வசித்து வந்தவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே இருந்து வந்தனர். இந்தநிலையில் சேதமடைந்து கிடந்த அந்த வீட்டை இடித்து அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் கட்டிடத்தை இடிக்கும் பணி தாமதமானது.
இந்தநிலையில் இன் று காலை அந்த வீடு திடீரென முழுவதுமாக இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகள் சாலையில் விழுந்து கிடந்தன. ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட போலீசார் தடை விதித்து இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து இடிந்து விழுந்த வீட்டின் கட்டிட இடிபாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.