அன்வர் ராஜா செய்தது தவறு... நீக்கியது சரி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கையே என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

Update: 2021-12-01 10:41 GMT
சென்னை,

அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

அன்வர் ராஜா கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேன் தற்காலிகமாக அவை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அன்வர் ராஜாவை பொறுத்தவரைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். 

அதிலே கழகத்தின் கொள்கைகளுக்கும், கழகத்தின் கோட்பாடுகளுக்கும், முரண்பாடான வகையில் கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில், செயல்பட்ட காரணத்தினால் கழகத்தின் அடிப்படை பொறுப்பு மற்றும் அத்தனை பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழகம் என்பது ஒரு மாபெரும் இயக்கம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து இயக்கத்தைப் பொறுத்தவரை ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கின்ற ஒரு இயக்கம். எனவே கழகத்தில் இருந்துகொண்டு கழகத்தை விமர்சனம் செய்வது, கழக கூட்டங்களிலே அதாவது அறைக்கு உள்ளே நடக்கும் விஷயங்களை எல்லாம் வெளியில் தெரிவிப்பது நல்லதல்ல.

நான்கூட தான் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். கட்சியின் கொள்கையின்படிதான் நான் கருத்து சொல்ல முடியும். கூட்டத்தில் பரிமாறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் வெளியே வந்து சொல்வது, அதன் மூலம் விமர்சனங்கள் செய்வது என்பது எந்த விதத்தில் ஏற்க முடியும்? அது கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலாகத்தான் கருதமுடியும். 

இந்த போக்கை நாம் அனுமதிப்பதின் மூலம் கழகத்தில் எல்லோரும் பேச ஆரம்பிப்பார்கள். கட்டுப்பாடு இல்லாமல் போகும். எனவே அன்வர்ராஜா மீது எடுத்த நடவடிக்கை என்பது உரிய காலத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்று தான் நான் குறிப்பிடுவேன் என கூறினார்.

மேலும் செய்திகள்