தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது: தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின

தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்வதால் மேலநத்தம், சீவலப்பேரி தரைப்பாலங்கள் மூழ்கின.

Update: 2021-11-30 19:53 GMT
நெல்லை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதுதவிர காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

தரைப்பாலங்கள் மூழ்கின

இதன் காரணமாக நெல்லை மேலநத்தம்-கருப்பந்துறை தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது.

மேலும் குறுக்குத்துறை முருகன் கோவில் கல்மண்டபமும் வெள்ளத்தில் மூழ்கியது. கோபுரம், விமானம் மட்டுமே வெளியே தெரிந்தன. கோவிலுக்கு செல்லும் பாலமும் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டது. அங்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சீவலப்பேரி தரைப்பாலத்தையும் வெள்ளம் மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் பர்கிட்மாநகரம் -சீவலப்பேரி இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளையை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டுகிறது.

மேலும் செய்திகள்