கனமழை: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 13-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பாதிப்பு முன்னெச்சரிக்கையாக நேற்று 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல், தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, கடலூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பெரம்பலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.