தேர்தல் தயார்நிலை பற்றி ஆய்வு: தமிழகத்திற்கு தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு நாளை வருகை
தேர்தல் தயார் நிலை பற்றி ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு நாளை (21-ந் தேதி) தமிழகம் வரவுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 2021-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவை தவிர, எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களை தயார்படுத்துவது, சமூக இடைவெளிக்காக வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைத்து, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, உயரதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளநிலையில், வாக்காளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் தேர்தலை நடத்துவது சவாலாக இருக்கும். அதற்கேற்ற வகையில் வாக்குப்பதிவை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்கச் செய்வதற்கான புதிய உத்திகள் வகுக்கப்படவுள்ளன. தட்டிக்கழிக்காமல் வாக்களிப்பது, ஓட்டுக்கு பணம் பெறுவதை தவிர்ப்பது போன்றவற்றை பிரதானமாக மக்கள் முன்வைப்பதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அவதூறு பிரசாரங்களை கட்டுப்படுத்தவும், சமூக வலைதள விளம்பரங்களை முறைப்படுத்தவும் விதிமுறைகள் வகுக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் சில மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. முக்கியமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாத நிலையில்தான் தேர்தலை சுமுகமாக நடத்த முடியும்.
எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பொதுப் பிரச்சினைகள், தேர்தல் தயார்நிலை, தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள், கருத்துகள் ஆகியவற்றை அறிய தமிழகத்துக்கு உயர்மட்ட குழுவை இந்திய தேர்தல் ஆணையம் அனுப்புகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்டக் குழு நாளை 21-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வரவுள்ளது. தமிழகத்தின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட கலெக்டர்கள்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் உயர்மட்டக் குழு ஆலோசனை மேற்கொள்ளும்.
முன்னதாக நாளை காலை 11.30 மணியளவில் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறுவார்கள். அரசியல் கட்சிகளை உயர்மட்டக் குழுவினர் தனித்தனியாக சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.
நாளை மறுநாள் 22-ந் தேதியன்று தமிழகத்தின் உயரதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள். இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மாநில அரசின் தயார்நிலை பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இரண்டு நாட்களிலும் நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஒருங்கிணைத்துச் செயல்படுவார்.