தமிழகத்திற்கு குறைவான நிவாரண நிதி: மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சம் காட்டுவது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி

தமிழகத்திற்கு குறைவான நிவாரண நிதி வழங்கி மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சம் காட்டுவது ஏன்? என கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-12-18 17:08 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் சமீபத்தில் வீசிய ‘நிவர்’ புயலாலும், ‘புரெவி’ புயலாலும் 41 ஆயிரத்து 262 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.3 ஆயிரத்து 758 கோடி நிதியுதவி மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது. ஆனால், மாநில அரசு கேட்ட தொகைக்கும், மத்திய அரசு வழங்கிய நிதியையும் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்தான் தெரிகிறது.

தமிழக அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கேட்ட மொத்த நிவாரணத்தொகை ரூ.1,20,500 கோடி. ஆனால், பா.ஜ.க. அரசு 6 கட்டங்களாக வழங்கியதோ ரூ.5,778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி.

பா.ஜ.க. அரசின் அலட்சியப் போக்கிற்கு என்ன காரணம்?, தமிழக அரசை துச்சமென மதிப்பது ஏன்?, தமிழக மக்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்?. ஆட்சி மாற்றத்தை உருவாக்குகிற வகையில் பா.ஜ.க. அரசின் வஞ்சக அரசியலை தமிழக மக்களிடம் தோலுரித்து காட்டுவதே தி.மு.க.–காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்