உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளை தரகர்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி கொச்சைப்படுத்துகிறார் - மு.க.ஸ்டாலின்
உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளை தரகர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி வருகிறார் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடலூரில் தி.மு.க. பொதுக்கூட்டத்தை காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இதுவரை வேளாண் சட்டங்களை ஆதரித்து வந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது விவசாயிகளையே கொச்சைப்படுத்தவும் தொடங்கி இருக்கிறார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்கள், தரகர்கள் என்று சொல்லி இருக்கிறார். இதை விட விவசாயிகளை கொச்சைப்படுத்த முடியுமா? கேவலப்படுத்த முடியுமா?.
இவர் தான் வெல்லமண்டி தரகராக இருந்தவர். தரகராக இருந்தவர், விவசாயி வேடம் போடுவதால் உண்மையான விவசாயிகள் எல்லாம் தரகர்களாகத் தெரிகிறார்கள். டெல்லியில் போராடுபவர்கள் தரகர்கள் என்றால், அதை டெல்லியில் போய் சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் உண்டா?.
விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் ரத்து ஆகாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகள் துயர் துடைக்க 1989-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, விவசாயிகளுக்கு வழங்கிய மாபெரும் கொடைதான் இலவச மின்சாரம். மத்திய அரசால் இப்போது நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களில், இலவச மின்சாரம் பற்றியோ, மின் மானியங்கள் பற்றியோ, மின்சார சலுகைகள் பற்றியோ இல்லை.
அதுமட்டுமல்ல, மத்திய அரசு கொண்டு வர இருக்கிற புதிய மின்சார சட்டமானது இதுபோன்ற சலுகைகளை முற்றிலுமாக பறித்துவிடும். மின் உற்பத்தியையே பெரும்பாலும் தனியாருக்குக் கொடுக்கப்போகிறார்கள். காலப்போக்கில் மின் இணைப்புகளே தனியார் நிறுவனங்கள் தரும் என்பதைப் போல மாற்ற இருக்கிறார்கள். அப்படிச் செய்தால் இலவச மின்சாரம் தர மாட்டார்கள்.
விவசாயிகளுக்கோ, கைத்தறிக்கோ, - விசைத்தறிக்கோ, - மின்சார சலுகைகள் வரிசையாகப் பறிக்கப்படும். இது எதுவும் தெரிந்து கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக இலவச மின்சாரம் ரத்து ஆகாது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கென்ன, இன்னும் மூன்று மாதம் தான் இருக்கிறது.
அப்படிக் கூட உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிசாமியின் நாற்காலி ஆடிக்கொண்டு இருக்கிறது. பதவிக்காலம் முடிவதற்கு முன்னாலேயே அவரது நாற்காலியைக் கவிழ்க்க உள்ளுக்குள்ளேயே சில சதிகள் நடந்து வருவதாக எனக்கு செய்திகள் வருகிறது. அந்த பதற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்க நித்தமும் ஏதோ உளறிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எப்படியாவது பா.ஜ.க. தலைமையின் கருணை தனக்கு கிடைக்காதா என்று தவம் இருக்கிறார். அதனால் தான் எதையும் தாரைவார்க்கத் தயாராகி விட்டார். அவருக்கு மக்கள் எந்த காலத்திலும் கருணை காட்ட மாட்டார்கள். அதைச் சொல்லப்போகும் தேர்தல் தான், சட்டமன்றத் தேர்தல்.
உங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள, உங்களை காப்பாற்றிக்கொள்ள, தமிழ்நாட்டை -தமிழ்நாட்டு மக்களை அடமானம் வைக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று நாட்டு மக்கள் உங்களுக்கு உணர்த்தப்போகும் தேர்தல் தான் இந்த தேர்தல். எம்.ஜி.ஆரின் பாடல் வரிக்கு ஏற்ப இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் தேர்தல் இது. பணி முடிப்போம், ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.