கொரோனா காலத்துக்கான சாலை வரியை தள்ளுபடி செய்யவேண்டும் - தமிழக அரசுக்கு, லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தல்
மற்ற மாநிலங்களைப் போல கொரோனா காலத்துக்கான சாலை வரியை தள்ளுபடி செய்யவேண்டும் - தமிழக அரசுக்கு, லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்து உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள போக்குவரத்துறை அலுவலகத்தில் அந்த துறையின் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். அதனைத்தொடர்ந்து லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் முருகன் வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக போக்குவரத்து துறை ஊழல்துறையாக செயல்பட்டு வருகிறது. சுமார் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடக்கிறது. போக்குவரத்து துறை ஆணையர் நீதிமன்ற உத்தரவுப்படி வேகக்கட்டுப்பாட்டு கருவியை அமல்படுத்தவில்லை. பிரதிபலிப்பு ஸ்டிக்கர், ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது தொடர்பான உத்தரவையும் அமல்படுத்தாமல் இருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டால் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருக்கிறார்.
அதேபோல், கொரோனா காலத்தில் 15 மாநிலங்கள் 3 மாதங்களுக்கு சாலைவரியை தள்ளுபடி செய்தது. ஆனால் தமிழக போக்குவரத்து துறைதான் வரியை கட்டியே தீரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது. சாலைவரியை தள்ளுபடி செய்ய வேண்டும். போக்குவரத்துதுறை இடைத்தரகர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டு இருக்கிறது. போக்குவரத்து துறை ஆணையரின் உத்தரவு ஊழலுக்கு வழிவகுக்கக்கூடிய வகையில் தான் உள்ளது. எனவே அவரை அரசு பதவிநீக்கம் செய்யவேண்டும். முதல்-அமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் தனியார் நர்சரி, பிரைமரி, உயர்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் தலைவர் கனகராஜ் தலைமையில் நிர்வாகிகள் போக்குவரத்து துறை ஆணையரை சந்தித்து பள்ளி வாகனங்கள் தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.