இலங்கை கடற்படை கைது செய்த 36 தமிழக மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 36 பேரை படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை, டிச.18-
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 14-ந்தேதி நடந்த 2 சம்பவங்களில், தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 36 இந்திய மீனவர்களை 5 எந்திர மீன்பிடி படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்ததை, உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இலங்கை அரசாங்கம் நமது மீனவர்களுடைய படகுகளை விடுவிக்காமல் இருக்கும் நடைமுறையை கொண்டிருப்பது, தமிழக மீனவர்களிடையே மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாங்கள் இதில் தலையிட்டு, உடனடியாக இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் மேல்மட்ட அதிகாரிகளிடம் எடுத்து சென்று, தற்போது இலங்கை காவலில் உள்ள 36 இந்திய மீனவர்களையும், 5 எந்திர மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளிவிவகாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.