தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார்.

Update: 2020-12-17 18:51 GMT
திருச்சி, 

தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொது கணக்கு குழு தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ்நிலையம், அரசு கூர்நோக்கு இல்லம், மத்திய சிறைச்சாலை, வேளாண் கல்லூரி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.

இதனைதொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் துரைமுருகன் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டபோது, துரைமுருகனுக்கு திடீரென தலைசுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு நேற்று மாலை 6.30 மணி அளவில் திருச்சி வந்தடைந்தார்.

திருச்சியிலுள்ள மாருதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சைக்கு பிறகு இரவு 7.15 மணிக்கு அவர் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்