அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் - முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.;
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் சுகாதாரத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 36 கோடியே 73 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற 39 திட்டப்பணிகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து 26கோடியே 52லட்சம் மதிப்பில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், 129 கோடியே 34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அரியலூர் மாவட்டத்தில், ஆரம்பத்தில் சற்று அதிகமாக இருந்து கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் அரசு அறிவித்த ஆலோசனைகளின்படி மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் சரியான முறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது படிப்படியாகக் குறைந்து, கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் முகாமின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 30,422 மனுக்களில் தகுதியான 20,053 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், 15,630 மனுக்கள் ஓய்வூதியம் வேண்டியும், 7,838 னுக்கள் வீட்டுமனைப் பட்டா மாறுதல் வேண்டியும் விண்ணப்பித்துள்ளனர். அரசு அவற்றையெல்லாம் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2019-20ஆம் நிதியாண்டில் 6,000 நபர்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை இம்மாவட்டத்தில், 6,316 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறையின் சார்பாக 2019-20ஆம் ஆண்டில் 6 தடுப்பணைகள் கட்டும் பணிகள் மற்றும் 8 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் என மொத்தம் 14 பணிகள் ரூபாய் 63 கோடியே 95 இலட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 13 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள, சுண்டக்குடி கிராமத்தில் தடுப்பணை கட்டும் ஒரு பணி முடியும் தருவாயில் உள்ளது. 2019-20ஆம் ஆண்டில் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் பகுதி 2-இன் கீழ் அரியலூர் மற்றும் வட்டம் நந்தியாறு-கூழையாறு உபவடிநில பகுதியில் ரூபாய் 15.72 கோடி மதிப்பீட்டில் 19 ஏரிகள் மற்றும் 55 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள், வரத்து கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் 40 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது, எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்..