‘டார்ச் லைட்’ சின்னத்தை மீட்க சட்ட ரீதியாக போராடுவோம் - கமல்ஹாசன்

‘டார்ச் லைட்’ சின்னத்தை மீட்க சட்டரீதியாக போராடுவோம் என்று நெல்லையில் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2020-12-16 22:27 GMT
நெல்லை, 

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கினார். அவர் நேற்று காலையில் பாளையங்கோட்டை அன்புநகரில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?

பதில்:- இந்த கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய தருணம் இதுவல்ல, இருந்தபோதிலும் பதில் அளித்து இருக்கிறேன். நான் செல்லும் இடங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பெண்கள் உள்பட அனைவரும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்து இருப்பது கண்ணீரை வரவழைக்கும் ஆனந்தம் ஆகும். எனவே, இதுவரை நடக்காத அரசியலை நிகழ்த்தி காட்டுவோம்.

கேள்வி:- தி.மு.க. கூட்டணிக்கு அழைத்தால் போவீர்களா?

பதில்:- இப்போது அதுபற்றி பேச வேண்டியதில்லை.

வேளச்சேரியில் போட்டியா?

கேள்வி:- 3-வது அணி அமையுமா?

பதில்:- வாய்ப்பு இருக்கிறது.

கேள்வி:- ரஜினி உங்களுடன் கூட்டணி சேர்ந்தால் யார் முதல்-அமைச்சர் வேட்பாளர்?

பதில்:- அதை பேசி முடிவு செய்வோம்.

கேள்வி:- சென்னை வேளச்சேரி தொகுதியில் நீங்கள் போட்டியிட போவதாக கூறப்படுகிறதே?

பதில்:- பல இடங்களில் போட்டியிட பரிந்துரை செய்துள்ளனர். அதுகுறித்து பரிசீலனை செய்து வருகிறோம். எனது மனசாட்சிப்படி ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன். அதுதான் மக்களை முழுமையாக சந்திக்க வாய்ப்பாக அமையும்.

கேள்வி:- மத்திய அரசுக்கு எதிராக நீங்கள் பேசியதால்தான் ‘டார்ச் லைட்’ சின்னம் முடக்கப்பட்டதா?

பதில்:- அப்படித்தான் பரவலாக பேசி வருகிறார்கள். சட்டப்படி, நியாயமாக எங்களுக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 18 நாட்களில் டார்ச் லைட் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தோம். ஆனால், தற்போது தேர்தல் ஆணையம் நடந்து கொண்டது நியாயம் இல்லை. டார்ச் லைட் சின்னத்தை மீட்க சட்டரீதியாக போராடுவோம். அதுபற்றி ஒருசில நாட்களில் முடிவு எடுக்கப்படும்.

கேள்வி:- ரஜினியுடன் ரகசிய ஒப்பந்தம் ஏதும் உள்ளதா?

பதில்:- நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் ஒப்பந்தம் எதுவும் கிடையாது. சேர்ந்தால் ஒன்றாக பயணம் செய்வோம்.

கேள்வி:- பெரியாரும், அண்ணாவும் தற்போது மறைந்து வருவது போல் தெரிகிறதே?

பதில்:- இருவரும் ஏற்கனவே மறைந்தவர்கள்தான். ஆனால், பெரியார் எனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் ஒருபோதும் மறையாது. என்னுடைய தந்தை எந்த அளவுக்கு என்னை செதுக்கி உள்ளாரோ, அதுபோல் பெரியாரும் என்னை செதுக்கி உள்ளார்.

கேள்வி:- தமிழக வளர்ச்சிக்கு என்ன திட்டம் உள்ளது?

பதில்:- அரசு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தம் மூலம் பணி வழங்க வேண்டும். நேர்மையானவர்கள் நல்லமுறையில் வாழும் சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

கேள்வி:- வருகிற தேர்தலில் பணபலம், அதிகார பலத்துடன் மோத தயாராக உள்ளர்களா?

பதில்:- அவர்களை வெல்ல அவர்கள் கொண்டுள்ள பணம் மற்றும் அதிகாரம் என்ற ஆயுதத்தை கொண்டுதான் எதிர்கொள்ள வேண்டும் என்பதில்லை. பைபிளில் கூறி இருப்பது போல் சாதாரணமாக வெல்ல முடியும். அதற்கு என்னிடம் மக்கள் பலம் உள்ளது.

கேள்வி:- இலவச திட்டம் உள்ளதா?

பதில்:- மக்களுக்கு இலவசம் கொடுக்க வேண்டியதில்லை. குடிநீர் இலவசமாக கொடுக்க வேண்டும். நீதியை காப்பாற்ற இந்த அரசு மாற்றப்பட வேண்டும்.

கேள்வி:- ரஜினி, இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று கூறி உள்ளாரே?

பதில்: மாற்றம் இப்போதே வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்