சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

தமிழகத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-12-16 19:23 GMT
சென்னை,

தமிழகத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலையை போன்று, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது. சென்னையில் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.660 ஆக அதிகரித்தது. தற்போது மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.710-க்கு விற்கப்படுகிறது.

இது சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே மாதத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு 2 முறை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது. உடனடியாக மத்திய அரசு இந்த விலை உயர்வை திருப்பப்பெற வேண்டும்.

விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 15 நாட்களில் ரூ.100 உயர்த்தி இருப்பது பகல் கொள்ளையை விட மோசமானது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை சுரண்டும் இந்த விலை உயர்வை அரசு உடனே திரும்பப்பெற்று பழைய விலைக்கே கொடுக்க வேண்டும்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்நிலையில், பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக உயர்த்தி லிட்டர் ரூ.40-க்கு விற்கவேண்டிய பெட்ரோலை ரூ.86-க்கு விற்று மக்களை சுரண்டுகிறது மோடி அரசு. அது போதாதென்று சமையல் கியாஸ் விலையையும் தன் விருப்பம்போல் உயர்த்தி வருகிறது.

கடந்த 15 நாட்களில் மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த 1-ந் தேதி சிலிண்டர் விலை 610 ரூபாயில் இருந்து 660 ரூபாயாக உயர்த்தப்பட்டது. டிசம்பர் 15 முதல் அது ரூ.710 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த மக்கள்விரோதப் போக்கை விடுதலைசிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி., சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோரும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்