‘தமிழகம் மீட்போம்’ சிறப்பு பொதுக்கூட்டம்: சமூக வலைதளங்களில் ஒரு கோடி பார்வையாளர்கள்; தி.மு.க. தலைமை தகவல்

‘தமிழகம் மீட்போம்’ சிறப்பு பொதுக்கூட்டம் ஆனது சமூக வலைதளங்களில் ஒரு கோடி பார்வையாளர்களால் காணப்பெற்றுள்ளது என தி.மு.க. தலைமை தெரிவித்து உள்ளது.

Update: 2020-12-13 13:58 GMT

சென்னை,

தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 1-11-2020 முதல் மாவட்டந்தோறும் நடைபெற்று வரும் ‘தமிழகம் மீட்போம்’ - 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று வருகிறார். ஏற்கனவே 2 கட்டங்கள் நிறைவுற்ற இந்த பிரசார கூட்டம் 3வது கட்டமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை அளவில் பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே காணொலி வாயிலாக சந்திக்கும் வகையில் மாவட்ட கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பொதுக்கூட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காணொலி வாயிலாக பல்லாயிரக்கணக்கானோர் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும், முகநூல், டுவிட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் இந்த பிரசார பொதுக்கூட்டத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு வருகின்றனர்.

முகநூலில் தென்னிந்திய அரசியல் தலைவர்களுள் அதிகம் பேரால் பின்தொடரப்படும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த பிரசார கூட்டம், சமூக வலைதளங்களின் வாயிலாக மட்டும் தற்போது வரை 1 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்