எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான் - மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு
எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான் என்று மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை,
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வருகின்ற தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டு கொண்டு தேர்தலை சந்திக்க உள்ளன.
இந்த நிலையில் கமல்ஹாசன் மதுரையில் தனது முதல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். மதுரையில் அவர் சென்ற இடத்தில் எல்லாம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான். எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றி காட்டுவேன். எம்.ஜி.ஆர் கனவை நனவாக்காமல் உறங்கிக் கொண்டுள்ள ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது.
காந்தி மற்றும் பெரியார் ஆகியோர் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை. நற்பணி செய்தால் போதும் என்று என்னால் இருக்க முடியவில்லை. ஊழல் ஆட்சியாளர்களை ஒழித்து கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது.
கலாச்சார நகரமான மதுரையை அழித்து விட்டார்கள். மதுரையில் மீண்டும் ஒரு புரட்சிக்கு நாம் தயாராக வேண்டும். மதுரையை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே நமது உறுதிமொழி. மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றியே தீருவோம்.
இளைஞர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி காட்ட வேண்டும். இளைஞர்களை கூலிக்காரர்களாக இல்லாமல் சம்பளம் வழங்கும் முதலாளிகளாக மாற்ற விரும்புகிறேன். உணவு, நீர், வேலைவாய்ப்பு, ஆரோக்கியம் பேணும் அரசே அமைய வேண்டும். மக்களின் குறைகளை அரசியல் கட்சிகள் தேடி வந்து தீர்க்க வேண்டும்.
நீங்கள் ஆணையிட்டால் உங்களை நான் காப்பாற்றுவேன். நமது ஆட்சி உறுதி. ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது ஆட்சி உறுதி. எங்கள் கட்சியின் கொள்கை, லட்சியம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் நேர்மை. நேர்மையைக் கொண்டு தேர்தலில் வெல்வேன் ” என்று கமல்ஹாசன் கூறினார்.