திரைப்பட நலவாரியத்தில் பதிவு செய்ய 31-ந்தேதி வரை கால அவகாசம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
திரைப்பட நலவாரியத்தில் பதிவு செய்ய 31-ந்தேதி வரை கால அவகாசம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
சென்னை,
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
திரைப்படத்துறையினர் நலன் காப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட திரைப்படத்துறையினர் நல வாரியத்தில் பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசின் நலத்திட்டங்களும், அவற்றின் பலன்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டு வருகிறது. திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் துறை சார்ந்த அமைப்புகள், சங்கங்கள் மூலம் நவம்பர் 5-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை, உறுப்பினர் செயலர், திரைப்படத்துறையினர் நலவாரியம், கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜாசாலை, சென்னை-2 என்ற முகவரியில் விண்ணப்பிக்கவும், ஏற்கெனவே பதிவு செய்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுப்பிக்காமல் இருப்பவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவை உடனடியாக புதுப்பித்துக் கொள்ளவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்று காரணமாகவும், புயல், மழை ஆகியவற்றின் காரணமாகவும் திரைப்படத்துறையினர் நலவாரியத்தில் பதிவு செய்வது தொடர்பான விண்ணப்பங்களை ஒப்படைக்க இயலவில்லை. எனவே, இந்த காலக்கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும், என்கிற திரையுலகத்தினரின் கோரிக்கையினை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து மேற்படி விண்ணப்பங்கள் பெறப்படுவதை இந்த மாதம் 31-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.