70–வது பிறந்தநாள்: ரஜினிகாந்த் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்
ரஜினிகாந்தின் 70–வது பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீடு முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அப்போது கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் ரஜினிகாந்த் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னை:
ரஜினிகாந்த் தன்னுடைய 70–வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து கூறி வந்த நிலையில், கடந்த 2017–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந்தேதி ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார்.
அரசியலுக்கு வருவது பற்றி கூறிய ரஜினிகாந்த், எப்போது அரசியல் கட்சியை அறிவிப்பார்? என்று அவருடைய ரசிகர்கள் ஏங்கி காத்து இருந்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் ‘ஜனவரியில் கட்சி தொடக்கம் என்றும், அதுகுறித்து டிசம்பர் 31–ந்தேதி அறிவிக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சி கடலில் மேலும் ஒரு ஆனந்தமாக அவருடைய பிறந்தநாளும் இன்று வந்தது. இதனால் அவரை பார்க்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.
அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை தெரிவித்த பிறகு வந்த பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவருடைய வீட்டின் முன்பு இன்று காலை 6 மணி முதல் கூடத்தொடங்கினர். முன்னதாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவருடைய வீடு முன்பு சில ரசிகர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலையில் வீடு முன்பு ரசிகர்கள் திரண்டனர். காலை 8 மணியளவில் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் 8 மணியை தாண்டியும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் ரசிகர்கள் வா... தலைவா.... வா... தலைவா.... தரிசனம்... தா.... தலைவா... என்று கோஷங்கள் எழுப்பினர். சிலர் வருங்கால முதல்வரே, சூப்பர் ஸ்டாரே.... என்றும் முழக்கமிட்டனர். வெகுநேரமாக ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருந்த நிலையில், ‘ரஜினிகாந்த் வீட்டில் இல்லை என்றும், அவர் ஓய்வு எடுக்க பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும்’ வீட்டில் இருந்த சில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
உற்சாக கொண்டாட்டம்பிறந்தநாள் தினத்தன்று அவரை பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், ‘தலைவரின் உடல்நிலைதான் முக்கியம். ஆகவே அவர் நன்றாக ஓய்வு எடுக்கட்டும்’ என்றும் சிலர் தெரிவித்தபடி, தாங்கள் வாங்கி வந்திருந்த இனிப்புகளை வழங்கியும், கேக் வெட்டியும் ரசிகர்கள் கூட்டத்தில் பகிர்ந்து உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இதுதவிர ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் முதியோர்களை வைத்து கேக் வெட்டி ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து காலை உணவு மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.
அதேபோல், சென்னை எழும்பூர் பகுதியில் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், மாதா கோவிவில் கேக் வெட்டியும் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மேலும், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள சங்கரமடம் கோசாலையில் 108 கோ பூஜையும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செய்தனர்.
போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீடு முன்பு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வர தொடங்கியதால், ரஜினிகாந்த் வீட்டுக்கு திரும்பும் இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தடுப்பு வேலி அமைத்து ரசிகர்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இருப்பினும் ரசிகர்கள் திருப்பி அனுப்பிவிடப்பட்ட அதேசாலையில் வெகுநேரமாக நின்றுகொண்டே இருந்தனர்.