அதிமுகவிற்கு அடித்த அதிர்ஷ்டம்... சிவகங்கை மாவட்ட சேர்மன் தேர்தலில் குலுக்கல் முறையில் வெற்றி

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்.மணி பாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2020-12-11 06:53 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் வென்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் உள்ளன.

இந்நிலையில் ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக மேலும் 6 மாதங்கள் தேர்தல் தள்ளிபோனது. இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து டிசம்பர் 4-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில்  4 முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்குப்பதிவில் இருவரும் சம வாக்குகளை பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் முடிவு செய்தார். 

அதன்படி குலுக்கல் முறையில் நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்ற்ள்ளார். அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் தலா 8 வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்