8 மாதங்களாக வெளியே வராத ஸ்டாலின், தற்போது ஓட்டுக்காக களம் இறங்கியுள்ளார் - அமைச்சர் ஜெயக்குமார்
தன் உயிரை பொருட்படுத்தாமல், மக்களோடு மக்களாக இருப்பவரே தலைவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் புரெவி மற்றும் நிவர் புயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் அதே வேளையில், எதிர்கட்சி சார்பிலும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது கடந்த 8 மாதங்களாக வெளியே வராத திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது ஓட்டுக்காக களம் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று காலத்திலும் முதலமைச்சர் பழனிசாமி உள்பட அதிமுக அமைச்சர்கள் பலர் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். தன் உயிரை பொருட்படுத்தாமல், மக்களோடு மக்களாக இருப்பவரே தலைவர் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 13 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.