சென்னையில் நிலம் வாங்கி தருவதாக பொதுமக்களிடம் ரூ.1,100 கோடி சுருட்டல் மெகா மோசடி கும்பல் கைது

நிலம் வாங்கி தருவதாக பொதுமக்களிடம் ரூ.1,100 கோடி சுருட்டிய மெகா மோசடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-12-10 21:33 GMT
சென்னை,

சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா’ என்ற கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகை வசூலித்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டு மாத தவணையாக முதலீட்டு தொகை கட்டி உள்ளனர். பின்னர் அந்த நிறுவனம் பொதுமக்கள் கட்டிய முதலீட்டு தொகைக்கு சென்னையில் நிலம் வாங்கித்தரப்படும் என்று அறிவித்தது.

பொதுமக்களும் நாம் கட்டிய பணம் வீண் போகாமல் நிலமாக கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் நிலமும் கிடைக்கவில்லை, கட்டிய பணமும் பொதுமக்களுக்கு திருப்பித்தரப்படவில்லை. பொதுமக்கள் கட்டிய பணம் இன்னொரு கம்பெனி மூலம் ஏப்பம் போடப்பட்டது.

முறைகேடான பண பரிவர்த்தனை மூலம் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,100 கோடியும் மோசடி செய்யப்பட்டது. மோசம் போன பொதுமக்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதலில் இது தொடர்பாக 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர் இந்த வழக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. நேற்று இந்த மெகா மோசடி தொடர்பாக ‘டிஸ்க் அசெட் லீடு இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாகிகள் உமாசங்கர், அருண்குமார், ஜனார்த்தனன், சரவணகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் சென்னை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கண்ட தகவல்கள் அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்