சென்னையில் வடகிழக்குப் பருவமழை 47% அதிகம் பெய்துள்ளது -சென்னை வானிலை மையம்
சென்னையில் வடகிழக்குப் பருவமழை 47 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்றைய நாள் வரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையளவு 39.6 செ.மீ. ஆகும். ஆனால், இதே காலக்கட்டத்தில் இந்த ஆண்டு பெய்திருக்கும் மழையளவானது 43.1 செ.மீ. ஆகும். எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவ மழை 9 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது.
சென்னையில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையில் பெய்திருக்கும் மழையளவானது 102.9 செ.மீ. ஆகும்.
வடகிழக்குப் பருவக் காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக காயல்பட்டனத்தில் 7 செ.மீ., கோத்தகிரி, குன்னூரில் தலா 5 செ.மீ., திருச்செந்தூரில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என கூறப்பட்டு உள்ளது.