"ஆதாரம் இல்லாமல் அறிக்கை விடுகிறார் ஸ்டாலின்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் அறிக்கை விடுகிறார் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-12-09 03:50 GMT
கரூர்,

கரூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் ஊழல் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டு சொல்லி வருகின்றார் ஸ்டாலின். அதனையடுத்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆயிரக்கணக்கில் ஊழல் என்று சொல்லி வருகின்றார். தினந்தோறும் அரசு மீதும், முதல்-அமைச்சர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார் ஸ்டாலின். போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு விருதுகளை இந்திய அளவில் பெற்றுள்ளது. எப்.சி எடுக்க செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் தான் வாங்க வேண்டும் என்றும், அமைச்சர் சொல்லும் நிறுவனங்களில் தான் வாங்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறக்கப்படவில்லை.

மத்திய அரசின் உத்தரவின் பெயரில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் ஒளிரும் பட்டைகள் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒரிஜினல் பட்டை விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும், அதற்கும் தடையாணை பெறப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்துவது தொடர்பாக லாரி சங்கத்தினர் குற்றச்சாட்டு சொல்லி வருகின்றனர். அது பொய்யான குற்றச்சாட்டு ஆதாரமற்றது.

வேக கட்டுப்பாட்டு கருவி 2017 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 1.12.2019 முதல் முறையாக செய்ய வேண்டும் என்று ஜி.பி.எஸ் பொறுத்த 15 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 நிறுவனங்கள் வேக கட்டுப்பட்டு கருவி பொருத்த விண்ணப்பித்து இருந்தார்கள் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 நிறுவனங்களுக்கு ஒளிரும் பட்டைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் ரூ.24 கோடிக்கு டெண்டர் 2019-ல் விடப்பட்டது. ஆனால் கொரோனா கால கட்டம் என்பதால் தள்ளி வைக்கப்பட்டது. தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இருந்து ரூ.23 கோடி டெண்டர் கோரப்பட்டுள்ளதை ரூ.900 கோடி டெண்டராக உயர்த்தப்பட்டதாக மு.க.ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் சொல்கிறார். அதை நிரூபிப்பாரா?. ஸ்டாலின் பஸ்சில் மேற்கூரை ஒழுகுவதாக குற்றம் சாட்டுகிறார். 2012-ல் வாங்கப்பட்ட பஸ்கள் அவை. தற்போது அந்த நடைமுறை இல்லை. அப்போது அமைச்சராக இருந்த செந்தில்பாலஜி தற்போது அவர் கட்சியில் இருக்கிறார். அவரிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளட்டும்.

ஒளிரும் ஸ்டிக்கர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வேக கட்டுப்பாட்டு கருவி 4000 தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின். 2014-ல் நடைமுறையில் இருந்து வருகிறது. கட்டுப்பாட்டு அறை பொருத்தப்பட்ட பிறகு அவை முழுமையாக செயல்படுத்தப்படும். மத்திய அரசிடம் அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பெற்று தான் பொருத்த வேண்டும். எந்த வாகனத்திற்கும் வரி நிர்ணயம் செய்யவில்லை, நம் மாநிலத்தில் பழைய நடைமுறையே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்