பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் கேட்ட பின்னர் முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-09 03:50 GMT
காஞ்சிபுரம்,

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் பல்வேறு அமைச்சர்களை நியமனம் செய்து உத்தரவிட்டார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். வடமங்கலம், உள்ளிட்ட இடங்களில், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மற்றும் வாழைமரத்தோப்புகளை அவர் பார்வையிட்டார். மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகளை அரசு திறக்கும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்