"யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ரஜினி கட்சி தொடங்கிய பின் கருத்து கூறுகிறேன்" - மு.க.ஸ்டாலின்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதனை தொடர்ந்து மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். குடிமராத்து பணியில் அரசு சாதனை செய்யவில்லை. ஊழல் தான் செய்து வருகின்றனர். சாதிவாரியான கணக்கெடுப்புக்கு ஆணையம் என்பது அரசியல் நாடகம் என தெரிவித்தார்.
ஸ்டாலின் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருவதாக முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்ததற்கு பதில் அளித்த அவர், ஆளும் கட்சியினர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவது தான் எதிர்கட்சியின் பணி. அது தான் அரசியல் மரபு. அதைத் தான் நான் செய்துக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சர் எனக்கு சூட்டியிருக்கும் பட்டம் அறிக்கை நாயகன். அப்படி நான் அறிக்கை நாயகன் என்றால், எடப்பாடி பழனிசாமி ஊழல் நாயகன் என தெரிவித்தார்.
திமுகவின் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஸ்டாலின், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் மீதான வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார். மேலும், ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் கட்சி தொடங்கி கொள்கையை அறிவித்தவுடன் பதில் கூறுகிறேன். திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என ரஜினி சொன்னதாக எனக்கு தகவல் வரவில்லை. தமிழருவி மணியனை ஏன் அருகில் வைத்துக்கொண்டோம் என ரஜினி சொன்னதாகத்தான் எனக்கு தகவல் வந்துள்ளது என்றார்.