கொடி நாள்; தாயகத்தை காக்கும் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றுவோம் - முதலமைச்சர் பழனிசாமி
முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.
சென்னை,
நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.
பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.
இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.
இந்தநிலையில் இந்த ஆண்டும் டிசம்பர் 7-ந் தேதியை மத்திய-மாநில அரசுகள் கொடி நாளாக அனுசரித்து வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
முப்படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்காக, நன்கொடைகள் மற்றும் கொடி விற்பனைகள் மூலம் நிதி திரட்டப்பட்டு, அவர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் அனுசரிக்கப்படும் இந்த கொடிநாளில் அவர்தம் தியாகங்களை போற்றி வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.