மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடக்கம் கொரோனா பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே அனுமதி

மருத்துவ கல்லூரிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. கொரோனா பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

Update: 2020-12-06 22:15 GMT
சென்னை, 

கொரோனா பரிசோதனை முடிவில் (ஆர்.டி.பி.சி.ஆர்.) பாதிப்பு இல்லை என்று இருந்தால் மட்டுமே மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். மேலும் ஒரு வகுப்பறையில் 20 முதல் 25 மாணவர்கள் அமர்ந்து படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தன்மையை கருத்தில் கொண்டு கல்லூரிகளை திறக்கலாம் என்று மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் தெரிவித்தன.

அதன்படி, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த 2-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளன. இதற்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதேபோல், மருத்துவ படிப்பில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகளும் இன்று தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் 48 மணி நேரத்துக்குள் ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை கையில் கண்டிப்பாக எடுத்துவர அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். அந்த பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்யவும் கல்லூரிகளில் தனியாக கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

வெளியூர்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் கொரோனா பரிசோதனையை எடுக்கமுடியாமல் போயிருந்தால், அந்த மாணவர்கள் தனியறையில் தங்கவைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை முடிவு வந்தபிறகே வகுப்புகளில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதுதவிர மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். மாணவர்களுக்கு தேவையான முக கவசங்களை வழங்கவும் சில கல்லூரிகள் முன்வந்து இருக்கின்றன.

மேலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு வகுப்பறைக்கு 20 முதல் 25 மாணவர்கள் அமருவதற்கு ஏற்றபடி வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அனைத்து மாணவர்களும் கற்கும் வகையில் அதற்கேற்றபடி சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதுதவிர ஏற்கனவே ஆன்லைன் மூலம் நடக்கும் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் எனவும் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

கல்லூரி விடுதி அறையில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் வீதம் தங்கவும், சாப்பிடும் அறைகளில் அதிக மாணவர்கள் கூடுவதை தவிர்க்கவும் மாற்று ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகங்கள் செய்து இருக்கின்றன. நோய் அறிகுறியுடன் யாரும் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க அந்தந்த கல்லூரிகளில் தனியாக ஒரு குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களுக்கு தினமும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுவதையொட்டி, மருத்துவ கல்லூரி விடுதிகள் மற்றும் கல்லூரி வகுப்பறைகள் கிருமிநாசினி திரவம் கொண்டு முற்றிலுமாக நேற்று சுத்தம் செய்யப்பட்டன. விடுதிக்கு வந்திருந்த மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை முடிவில் பாதிப்பு இல்லை என்று தெரிந்தால்தான் விடுதிக்குள் செல்ல அனுமதித்தனர்.

அந்த வகையில் சென்னை பாரிமுனை அருகே உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரி விடுதிகளில் மாணவிகள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி விடுதி மற்றும் வகுப்பறைகள், கல்லூரி டீன் விமலா, வார்டன் சுமதி மேற்பார்வையில் சுத்தம் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்