சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 26 லட்சம் பேருக்கு இன்று முதல் இலவச உணவு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 26 லட்சம் பேருக்கு இன்று முதல் இலவச உணவு வழங்கப்பட உள்ளது.
சென்னை,
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் பேருக்கு இலவச உணவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 13-ந்தேதி வரை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன. இதனை அகற்ற பெருநகர சென்னை மாநகராட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர்மழையால், சாலைகள் மட்டும் அல்லாமல், தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளிலும், மழை நீர் புகுந்துள்ளது.
மேலும் தொடர் மழையால், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 13-ந்தேதி வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:-
சென்னையில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னையில், 5.3 லட்சம் குடிசை வாழ் குடும்பங்களில் உள்ள, 26 லட்சம் பேருக்கு தரமான, ஆரோக்கியமான உணவுகள் 3 வேளையும் இலவசமாக வழங்கப்படும்.
அதன்படி, நாளை (அதாவது இன்று) காலை முதல் தொடங்கப்படுகின்ற இலவச உணவு, வரும், 13-ந்தேதி வரை வழங்கப்படும். மக்களுக்கு தரமான உணவு வழங்குவதற்கான பணியாளர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மேலும், உணவு தயாரிப்புக்கு தேவையான பெரிய சமையல் கூடம், மாநகராட்சி சமுதாய நலக்கூடங்களில் உள்ளன. இதன் வாயிலாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை ஈடு செய்யும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.