இரட்டை பணிமூப்பு வழங்கும் அரசாணை ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
வீரப்பனை கொன்ற அதிரடிப்படையினருக்கு இரட்டை பணிமூப்பு வழங்கும் அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றதால் இரட்டைபதவி உயர்வு பெற்ற அதிரடிப்படையினருக்கு, இரட்டை பணிமூப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு காவல் பணிகள் விதிகளில் திருத்தம்செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சந்தனக்கடத்தல் வீரப்பன், 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, அதிரடிப்படையில் இருந்த 752 பேருக்கு இரட்டை பதவிஉயர்வு வழங்கி, அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.
ஒரு முறை நடவடிக்கையாக பதவி உயர்வு வழங்கப்பட்டபோதும், அதன்பின்னரும் 752 பேருக்கும் பணிமூப்பும் வழங்கப்பட்டது. இதனால் அதிரடிப்படையில் இடம்பெறாத பிற அதிகாரிகளும், காவலர்களும் பாதிக்கப்பட்டதால், 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், இரட்டை பதவி உயர்வு பெற்றவர்களுக்கான பணிமூப்பை வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து அதிரடிப்படையினர் தாக்கல்செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில், நிலுவையில் இருந்த நிலையில், 2013-ம் ஆண்டு அதிரடிப்படையினருக்கு மீண்டும் பணிமூப்பு வழங்கும் வகையில், காவல் பணிகள் விதிகளில் திருத்தங்கள் கொண்டுவந்து புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், இந்த அரசாணை சட்ட முன்னுதாரணங்களுக்கு எதிரானது எனவும், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும் கூறி, அதை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளார்.