விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா..? ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி
விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா..? டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை:
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. சார்பில், இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கருப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேளாண் சட்டத்துக்கு எதிராக சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பாராட்டையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு விவசாய போராட்டம் நடைபெற்றதில்லை. விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தை மதிக்காமல் மத்திய பாஜக அரசு உள்ளது.
பெரும்பான்மை உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக விவசாய விரோத சட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது. வேளாண் சட்டத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தபோதாவது மத்திய அரசு விழித்து இருக்க வேண்டும். அவசர அவசரமாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா?. மத்திய பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் போர் தொடுத்து வருகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மோடி கூறியிருந்தார். நாட்டில் ஆண்டுக்கு 10,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பாஜக அரசின் வேளாண் சட்டங்களில் எங்காவது குறைந்தப்பட் ஆதார விலை என்ற வார்த்தை உள்ளதா?
விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுவதாக முதல்வர் கூறுகிறார். எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக டெல்லி சென்று விவசாயிகளிடம் முதல்வர் பழனிசாமி கூறமுடியுமா?. ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என்று ஆ.ராசா கேட்டு 3 நாளாகியும் முதல்வர் பழனிசாமி வாய் திறக்கவில்லை.
சேலத்தில் திமுக போராட்டத்துக்கு தொண்டர்கள் வரக்கூடாது என பல்வேறு முயற்சிகளை செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களை காவல்துறை மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு தடுத்துள்ளது. போராட்டத்துக்கு வந்தவர்கள் தடுத்து மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், கொளத்தூர் ஆகிய இடங்களில் 25,000 திமுக தொண்டர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ள தொண்டர்களை பார்த்த பிறகே சென்னை செல்வேன்..
விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறக் கூடாது என அ.தி.மு.க செயல்படுகிறது. ஓரவஞ்சனையுடன் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என கூறினார்.