கடந்த 30 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 30 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-12-05 06:11 GMT
சென்னை,

வங்க கடலில் நிலைகொண்டிருந்த ‘புரெவி’ புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது.

இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் உள்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் ‘நிவர்’ புயலை முன்னிட்டு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் முழுமையாக வடிவதற்குள், ‘புரெவி’ புயல் காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இன்றும் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் நகரின் பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக முக்கியமான ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன.   புரெவி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இந்த மழையால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வங்கக்கடலில் ராமநாதபுரத்திற்கு 40 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 30 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழுந்தாலும் இன்றும், நாளையும் கனமழை தொடரும். அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்