அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலையில் மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடந்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் தற்போது பாம்பனுக்கு 250கி.மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 430 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்தப் புயல் சின்னம் காரணமாக சென்னையில் சென்ட்ரல், பாரிமுனை, மெரினா, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, எழும்பூர், மயிலாப்பூர், கோடம்பாக்கம், மற்றும் சென்னை புறநகர் பகுதிகளிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. முன்னதாக தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும், ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவங்கங்கை மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் 21 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும், அதீத மழை பொழிவு இருக்கும் என்பதை குறிக்க இந்த 6 மாவட்டங்களுக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் என்ற சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்திருந்தது.