வரும் 4-ந் தேதி முதல் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

வரும் 4-ந் தேதி முதல் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

Update: 2020-12-01 22:20 GMT
சென்னை, 

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை கல்வியியல் (பி.எட்.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வருகிற 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களின் சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் எங்கள் இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவர்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28278791 என்ற எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம். மேலும் ca-re@tng-as-a-edu.org மற்றும் tndceoffice@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் சந்தேகங்களை கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்