வேல்யாத்திரை நிறைவு விழாவில் ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்கிறார் - பா. ஜ.க தலைவர் எல்.முருகன் தகவல்

வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பதாக பா,ஜ.க தலைவர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-01 19:27 GMT
சென்னை, 

தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பா.ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை கடந்த மாதம் 6-ந் தேதி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொடங்கியது. தொடர்ந்து மேற்கு, வடக்கு மாவட்டங்களில் வெற்றிவேல் யாத்திரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இடையில் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாகவும், அதன் மீட்பு பணிகளில் பா.ஜனதா நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் வெற்றிவேல் யாத்திரை நிறுத்தப்பட்டது. 

நிவாரண பணிகள் காரணமாக யாத்திரை ரத்து செய்யப்பட்ட அறுபடை வீடுகளான சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் கோவில்களில் 5-ந் தேதி முருகனை தரிசித்து, 7-ந் தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது. வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தமிழக பா.ஜனதா பொறுப்பாளரும், தேசிய பொது செயலாளருமான சி.டி.ரவி, தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்