போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.;
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டுக்குழு கடந்த நான்கு நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி, அரியானா மாநில எல்லைக்கு அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயச் சட்டங்களைப் பிரதமர் நியாயப்படுத்தி பேசிக்கொண்டிருக்கும்போது, போராடும் விவசாயிகளுடன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவார்?
விவசாயிகளுக்கு எதிரான 12,000 வழக்குகளைத் திரும்பப்பெற்று, 3 விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் விவசாய சங்கங்களின் கோரிக்கை.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச வேண்டும். மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதற்கான அடித்தளமாக பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.