கிருஷ்ணாபுரம் அணையில் உபரி நீர் திறப்பு - கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கிருஷ்ணாபுரம் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஆகிய பகுதிகளிலும் விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பள்ளிப்பட்டு அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து லவகுசா ஆறுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
அதே நேரத்தில் கிருஷ்ணாபுரம் அணையும் வேகமாக நிரம்பி வருவதால், அணையில் இருந்து வினாடிக்கு 950 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக தரைப்பாலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி, கரையோர கிராமங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் பொன்னையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.