‘தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வீச வாய்ப்பில்லை’ - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

‘தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை வீச வாய்ப்பில்லை’ என்றும், தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-16 01:26 GMT
சென்னை, 

திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து அரசு முதன்மை செயலாளரும், சுகாதாரத்துறை செயலாளருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து ஆய்வு பணி மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை வீச வாய்ப்பில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. 

திருவள்ளூரில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை மற்றும் ரூ.220 கோடி மதிப்பீட்டில் கல்லூரி தங்கும் விடுதிகள் என ரூ.385 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவர்த்சவ், குடும்ப நலம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் ராணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்