தமிழக மக்களுக்கு “இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்: முதலமைச்சர் பழனிசாமி தீபாவளி சிறப்பு வாழ்த்து

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் அதிகமுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2020-11-14 10:13 GMT
சென்னை,

முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- 

முதலமைச்சர் அவர்கள் தீபாவளி அன்று உழைப்பாளர் தின வாழ்த்தோடு துவங்குகிறாரே எனக்குழம்ப வேண்டாம்.

இந்தத்தீபாவளி திருநாள் நம் அனைவரின் உழைப்பிற்கும் கிடைத்த மகசூல். கோவிட்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், கொரோனா காலத்திலும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் போன்ற பல செயல் திட்டங்களில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடத்தை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, நீர் மேலாண்மையில் முதல் மாநிலத்திற்கான ஜல்சக்தி தேசிய விருதையும் தமிழக அரசு பெற்றுள்ளது.

மாநில அரசுகளின் வளர்ச்சி அளவீடுகளை பயன்படுத்தி சிறப்பான ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

அரசும், அதிகாரிகளும், ஊழியர்களும் அதைச்சார்ந்தோரும் அயராது உழைத்து இந்த மகத்தான சாதனைகளைச்செய்துள்ளனர். இதில் மக்களாகிய உங்கள் பங்கும் மிகவும் முக்கியமானது.

பல விமர்சனப்பேரிடர்களையும், இயற்கை பேரிடர்களையும் கடந்து அம்மா வழியில் நடைபெற்ற இந்த நல்லாட்சி மற்றொரு ஆண்டை நிறைவு செய்கிறது.

இத்தருணத்தில் நமது உழைப்பிற்கு அகில இந்திய அளவில் கிடைத்திருக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சி அளித்தாலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் அதிகமுள்ளது.

இது மக்களான உங்களுக்கு நான் அளித்திருக்கும் கடமையை மீண்டும் நினைவூட்டுகிறது.

வருங்காலத்தில் தமிழ்நாட்டை அனைத்து துறையிலும் முதல் மாநிலமாக மாற்றும் பொறுப்பை தருகிறது.

அதற்காக எனது முழுமனதுடனும், உத்வேகத்துடனும் பணியாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். நம் உழைப்பின் வெற்றியால் அடுத்த தீபாவளி இன்னும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும் என நம்புகிறேன்.

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.... உயிர்மூச்சு உள்ளவரை உங்களுக்காக நான்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்