ரூ.2 கோடி வரை வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை - வருமான வரித்துறை அறிவிப்பு
ரூ.2 கோடி வரையிலான மதிப்பில் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு சலுகை தொகுப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் உள்ளன. இத்தகைய வீடுகளை விற்பனை செய்ய ஏதுவாக மத்திய அரசு ஒரு சலுகை அறிவிப்பை வெளியிட்டது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சலுகை தொகுப்பு திட்டங்கள் அடிப்படையில் ரியல் எஸ்டேட் துறையினரும், வீடு வாங்குவோரும் பயன்பெறும் வகையில் வருமான வரிச்சட்டம் பிரிவு 43 சிஏ மற்றும் வருமான வரிச்சட்டம் 56(2)(எக்ஸ்) ஆகியவற்றின் படி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரூ.2 கோடி வரையிலான மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனையை வழிகாட்டு மதிப்பீட்டு விலைக்கு 20 சதவீதம் குறைவான விலையில் விற்பனை செய்ய அனுமதித்து ரியல் எஸ்டேட் துறையினர், வீடு வாங்குவோர் வரிச்சலுகை பெறும்வகையில் வருமான வரி சட்ட விதிகள் தளர்த்தப்படுகின்றன.
அரசின் வழிகாட்டு மதிப்பீட்டு விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையே ஏற்கனவே இருந்து வந்த 5 சதவீத வித்தியாசம் 10 சதவீத வித்தியாசமாக உயர்த்தப்பட்டு வரிச்சலுகை அனுமதிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ரூ.2 கோடி வரை மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனைக்கு இந்த வித்தியாசம் 20 சதவீத அளவுக்கு தளர்த்தப்படுகிறது. இது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும்.
இதன்மூலம் வீடு வாங்குவோர் குறைவான வரி செலுத்தினால் போதும். இந்த சலுகை வீடு வாங்க விரும்பும் நடுத்தர வர்க்கத்துக்கு உதவும். இதற்காக வருமான வரி சட்டத்தில் உரிய நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.