தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வரும் நவம்பர் 16 தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக குறையாத நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து பள்ளிகளை திறப்பது குறித்து தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.