தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னை,
தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் இந்த பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். தீபாவளியையொட்டி சேலம் கோட்டமான சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 150 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் சோதனை நடத்த உள்ளனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் பல்வேறு இடங்களில் நின்று கொண்டு பஸ்களில் ஏறி சோதனை நடத்துவார்கள். அப்போது பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் அந்த பஸ்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிக பயணிகள் ஏற்றி செல்லுதல், பாதுகாப்பு விதிகளை மீறுதல் உள்ளிட்டவைகளையும் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போக்குவரத்து அதிகாரி கூறினார்.