பண்டிகை காலங்களில் கடைக்காரர்களும் பொதுமக்களும் நிச்சயம் முக கவசம் அணிய வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
பண்டிகை காலங்களில் கடைக்காரர்களும், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை எழும்பூர் மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான சி.டி. ஸ்கேன் கருவி பயன்பாட்டினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பண்டிகை காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.
அப்போது அவர், “தீபாவளி பண்டிகையையொட்டி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டாலும், அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். கடைக்காரர்களும், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
முக்கியமாக பண்டிகை காலங்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கொரோனா தொற்று எண்ணிக்கை விரைவில் குறையும்” என்று தெரிவித்துள்ளார்.