அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 லட்சம் பேர் சிறப்பு ரெயிலில் பயணம் - தெற்கு ரெயில்வே தகவல்
அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 லட்சம் பேர் சிறப்பு ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளசெய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால், கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது வரை 76 கொரோனா சிறப்பு ரெயில்களும், 27 பண்டிகை கால சிறப்பு ரெயில்களும் என 103 சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் குறைவான அளவில் பயணிகள் ரெயிலில் பயணித்தாலும், தற்போது அதிகளவில் பயணிகள் ரெயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் (அக்டோபர்) மட்டும் கொரோனா சிறப்பு ரெயில்களில் 74 சதவீத இருக்கைகள் நிரம்பியபடி 19 லட்சத்து 56 ஆயிரம் பயணிகளும், பண்டிகை கால சிறப்பு ரெயில்களில் சராசரியாக 57 சதவீத இருக்கைகள் நிரம்பியபடி 1 லட்சத்து 10 ஆயிரம் பயணிகளும் என மொத்தம் 20 லட்சத்து 66 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.