கடந்த 7 மாதங்களில் சரக்கு ரெயில் மூலம் ரூ.1,167.57 கோடி வருவாய் - தெற்கு ரெயில்வே தகவல்

கடந்த 7 மாதங்களில் சரக்கு ரெயில் மூலம் ரூ.1,167.57 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-11-02 09:25 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பயணிகள் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வகையில் சரக்கு ரெயில்களும், சிறப்பு பார்சல் ரெயில் சேவைகளும் தெற்கு ரெயில்வேயில் இயக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் தெற்கு ரெயில்வேயில் 2.09 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.162.42 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. மேலும் நடப்பு நிதி ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதத்தில் 14.47 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டதன் மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.1,167.57 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மூலம் அக்டோபர் மாதத்தில் மட்டும் அரிசி மற்றும் நெல் சரக்கு வகைகள் 2.61 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 56 சரக்கு ரெயில்கள் மூலம் ‘ஆட்டோமொபைல்’ தொடர்பான சரக்குகள் எற்றுமதி செய்யப்பட்டது. 

தெற்கு ரெயில்வே மூலம் அனைத்து ரெயில்வே கோட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்ட தொழில் மேம்பாட்டு குழுக்களால், இந்த சரக்கு போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்