தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு
தமிழகத்தில் நாளை முதல் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீங்கலாக டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது. ஆனால், உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடை வாங்கியதையடுத்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர, கடந்த மே மாதம் 16ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கி வருகின்றன.
இதையடுத்து, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்ததன் பேரில், கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. ஆனால் மாலை 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகள் 8 மணிக்குள் மூடப்பட்டு வந்தன.
இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில வாணிப கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.