தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-10-26 13:36 GMT
சென்னை,

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

கொரோனா தொற்று நிமோனியா மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லை. அவரது இணை நோய்களைக் கருத்தில் கொண்டு, அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்திற்கு உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும். அவர் அதிகபட்ச உயிர் காக்கும் உதவிகளுடன் இருக்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்