வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிப்பு - மருத்துவமனை அறிக்கை

கடந்த 13-ம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-10-25 11:53 GMT
சென்னை,

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 13ஆம் தேதி முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே மூச்சு திணறலால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. 

உடனடியாக, விழுப்புரத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், சென்னையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே அமைச்சர் துரைக்கண்ணு  நிலை குறித்து முதலமைச்சர் பழனிசாமி டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.  அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் எக்மோ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துரைகண்ணுவுக்கு நுரையீரலில் 90% பாதிப்புள்ளது. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ஐசியூவில் சிகிச்சை பெறும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்