பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2020-10-23 12:14 GMT
சென்னை,

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எம்.செங்குளம் கிராமத்தில் (விருதுநகர், எரிச்சநத்தம் அருகே) ராஜலட்சுமி பட்டாசு ஆலை உள்ளது. சிவகாசியை சேர்ந்த சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையை ஆமத்தூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து பட்டாசுகள் தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனி வெடிகள் தயாரிப்பின் போது மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. அப்போது அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 

இறந்தவர்கள் யார் என்பது அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உடல்கள் சேதமடைந்துள்ளன. மேலும் படுகாயமடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலையில் மேலும் தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கல்லுப்பட்டி போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் - எரிச்சநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட எதிர்பாரா வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொண்டு, காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்