திருவள்ளூர், காஞ்சீபுரம், உள்பட 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்காக வானிலை காணப்படுகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், அதன் காரணமாக 2 நாட்களுக்கு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.